தமிழக தேர்தல்: சொந்த ஊர் போறீங்களா? பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே!
ரயில் கால அட்டவணை மற்றும் வழித்தடங்கள்:
- சென்னை எழும்பூர் - மதுரை: (ஏப்ரல் 22) இரவு 9.55 மணிக்குப் புறப்படும் இந்தச் சிறப்பு ரயில் சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் வழியாக மதுரை சென்றடையும். டெல்டா மாவட்ட மக்கள் வாக்களிக்கச் செல்ல இது பெரும் உதவியாக இருக்கும்.
- சென்னை எழும்பூர் - கோவை: (ஏப்ரல் 22) இரவு 11.55 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கோவை நோக்கி இயக்கப்படுகிறது.
- மதுரை - தாம்பரம்: மதுரையில் இருந்து சென்னை திரும்புவோருக்காக நாளை (ஏப்ரல் 23) முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துக் கட்டண உயர்வு மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரும்பும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் ஒரு சிறந்த மாற்றாக அமையும். ஏற்கனவே பேருந்துகளில் இடமில்லாத பட்சத்தில், இந்தச் சிறப்பு ரயில்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வெளியூர்களில் தங்கிப் பணிபுரியும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தடையின்றி வாக்களிக்க ஏதுவாக, போக்குவரத்துத் துறை சார்பில் பிரம்மாண்டமான சிறப்புப் பேருந்து வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 வரை மூன்று நாட்களுக்குத் தமிழகம் முழுவதும் மொத்தம் 11,323 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் பேருந்துகளின் விபரம் :
வழக்கமாகத் தினசரி இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன், கூடுதலாக 6,234 சிறப்புப் பேருந்துகள் இந்த மூன்று நாட்களுக்கும் சேர்த்து இயக்கப்பட உள்ளன. குறிப்பாகச் சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல அதிகப்படியான பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து கிளாம்பாக்கம் (KCBT), கோயம்பேடு (CMBT) மற்றும் மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்குப் பேருந்துகள் புறப்படும்.திரும்பி வரவும் சிறப்பு வசதி :
வாக்குப்பதிவு முடிந்த பிறகு, மக்கள் மீண்டும் சென்னை மற்றும் தங்களது பணியிடங்களுக்குத் திரும்ப ஏதுவாக ஏப்ரல் 24 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், பயணத்தைச் சீராக்கவும் பயணிகள் அரசுப் போக்குவரத்துத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

