தமிழக தேர்தல் 2026 : ஒரு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா ?

 
1

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், ஒரு தொகுதிக்கு வேட்பாளர் எவ்வளவு செலவு செய்ய வேண்டும்? என்பது உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் களம் நேர்மையாக அமைவதை உறுதி செய்ய, வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தனது தேர்தல் பிரச்சாரம் மற்றும் இதர பணிகளுக்காக அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்படுவார்.

இந்தச் செலவினங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் தனித்தனி கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் தங்களின் அன்றாடச் செலவுகளைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள பதிவேட்டில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். இது வருமான வரித்துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளால் அவ்வப்போது தணிக்கை செய்யப்படும்.

தேர்தல் விதிமீறல்களைத் தடுக்கத் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்புக் குழுக்கள் வீதம், மாநிலம் முழுவதும் மொத்தம் 2,160 பறக்கும் படைகள் மற்றும் 2,160 நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளன. இதில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் தற்போது மார்ச் 17 வரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 23.28 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பொது இடங்களில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 1.68 லட்சம் சுவர் விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக இதுவரை 61 வழக்குகளில் குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் தலைவர்களின் சிலைகளை மூடுவது குறித்து எழுந்துள்ள சந்தேகங்களுக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, மறைந்த தலைவர்களின் சிலைகளைத் தேர்தல் விதிகளுக்காக மறைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது அரசியல் களத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அரசு அலுவலகங்கள் அல்லது பொது இடங்களில் இருந்தால், அவை உடனடியாக மறைக்கப்பட வேண்டும்.

வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவிலான ரொக்கப் பணத்தைக் கொண்டு செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணத்தைக் கொண்டு செல்லும்போது, அந்தப் பணம் எப்படிப் பெறப்பட்டது, எதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்பதற்கான வங்கி ஆவணங்கள் அல்லது தொழில்முறை ஆதாரங்களைக் கையில் வைத்திருக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், தணிக்கை அதிகாரிகளின் முடிவின்படி அந்தத் தொகை உடனடியாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும்.

இது தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால், மாவட்ட அளவில் உள்ள குறைதீர் குழுவிடம் முறையிடலாம். மேலும், தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை அச்சமின்றி ஆற்றத் தேர்தல் ஆணையம் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது.