#BIG NEWS : வசமாக சிக்கிய தவெக MLA ... களத்தில் இறங்கிய மகளிர் ஆணையம்... தமிழக டிஜிபிக்கு 7 நாட்கள் கெடு..!
கள்ளக்குறிச்சி பெண் அரசு அதிகாரி விவகாரத்தை, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள ஆணையம், 7 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த நவம்பர் 11-ஆம் தேதி, ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஏற்கெனவே பெண் அரசு அதிகாரியிடம் அந்த எம்எல்ஏ தவறாக நடந்துகொண்டதாகவும், மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்றதாகவும் அந்தச் செய்தியில் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, தேசிய மகளிர் ஆணையத் தலைவர் விஜயா ரஹத்கர், தமிழக காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பெண் அரசு அதிகாரி, உயர் அதிகாரிகளிடம் அளித்ததாகக் கூறப்படும் புகார் மனுக்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய வாட்ஸ்அப் தகவல்கள் உள்ளிட்ட டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாத்து, முறையாக ஆய்வு செய்யவும் தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசியல் அழுத்தம் அல்லது வெளிப்புறத் தலையீடுகள் இன்றி, சம்பந்தப்பட்ட நபர் எந்தப் பதவியில் இருந்தாலும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை 7 நாட்களுக்குள் தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெண் அரசு அதிகாரிகளின் கண்ணியம், பாதுகாப்பு, அவர்களின் உரிமைகள் ஆகியவை எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்கப்பட வேண்டும். எந்த பதவியில் இருப்பவராக இருந்தாலும் அல்லது செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் அல்லது தவறான நடத்தைக்கு பொறுப்பேற்பதில் இருந்து யாரையும் விடுவிக்க முடியாது" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், அதிகாரிகள் மீது தனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் இருப்பதாகவும், யாருக்கும் தவறான குறுஞ்செய்தி அனுப்பவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

