திருப்பூர் எஸ்.எஸ்.ஐ வெட்டிக்கொலை: ரூ.1கோடி நிதியுதவி - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..
திருப்பூர் மாவட்டம், சிக்கனூத்து அருகில் ரோந்துப் பணியின்போது உயிரிழந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிப்புரிந்துவந்த திரு.சண்முகவேல் (வயது 57) மற்றும் ஆயுதப்படைக் காவலர் திரு.அழகுராஜா ஆகிய இருவரும் நேற்று (05.08.2025) இரவு 11.00 மணியளவில் ரோந்துப் பணியின்போது சிக்கனூத்து அருகில் தனியரின் தோட்டத்து சாலையில் நடந்த அடிதடி பிரச்சனை குறித்து தகவல் அறித்ததும் விசாரிக்க சம்பவ இடத்திற்குச் சென்றபோது அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டிருந்த மூவர் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் ஆயுதப்படை காவலர் ஆகிய இருவரையும் துரத்திச் சென்று அரிவாளால் வெட்டியதில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சண்முகவேல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்சியும், வேதனையுமடைந்தேன்.

சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. சண்முகவேல் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைதுசெய்ய காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன். சண்முகவேல் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

