இன்று கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்கிறார் தமிழக முதல்வர் விஜய்..!
நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைநகர் டெல்லிக்குச் சென்றுள்ளார் தமிழக முதல்வர் விஜய்,, டெல்லியிலிருந்து அவர் நேரடியாகக் கர்நாடக மாநிலம் மங்களூரு விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வந்தடைவார் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று பகல் 12.30 மணி யளவில் மங்களூரு வரும் விஜய், பிறகு சாலை மார்க்கமாக சென்று பகல் 3 மணியளவில் கொல்லூர் திருத்தலத்திற்கு சென்று தரிசனம் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொல்லூர் மூகாம்பிகை அம்மனின் தீவிர பக்தராகத் திகழ்ந்தார். பல முக்கிய அரசியல் முடிவுகளுக்கு முன்பும், பின்பும் அவர் இக்கோயிலுக்கு நேரில் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 1984ம் ஆண்டு உயர் சிகிச்சைக்காக எம்ஜிஆர் அமெரிக்கா சென்றிருந்த போது அவருக்காக பலரும் கொல்லூர் சென்று வேண்டிக் கொண்டார்கள். சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய எம்ஜிஆர், தான் நலமுடன் திரும்பி வந்ததற்கும், அந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதற்கும் மூகாம்பிகை அம்மனே காரணம் என கருதியதால், அதற்கு நன்றிக்கடனாக கொல்லூர் மூகாம்பிகைக்கு ஒன்றரை கிலோ எடையுள்ள தங்க வாளை காணிக்கையாக செலுத்தினார். இந்த வாள் இன்றும் அம்மனின் கருவறையில் பாதுகாக்கப்பட்டு, முக்கிய விசேஷங்களின் போது மட்டும் அம்மனுக்கு அலங்காரமாக சாத்தப்படுகிறது.
தமிழக முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, கர்நாடக மாநில காவல் துறை மற்றும் உடுப்பி மாவட்ட நிர்வாகம் சார்பில் கொல்லூர் பகுதியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர் தரிசனம் செய்யும் நேரங்களில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், அதே நேரத்தில் முதல்வருக்கான உரியப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் விரிவான பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோயில் நிர்வாகத்தின் சார்பில் முதல்வருக்குச் சிறப்புப் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கவும், அம்மனுக்குச் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் சண்டி ஹோமம் போன்ற வழிபாடுகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு அண்டை மாநிலத்திற்கு விஜய் மேற்கொள்ளும் முதல் ஆன்மீகப் பயணம் இது என்பதால், தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

