கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்ய வேண்டும் : வேலூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை..!

 
1

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேலூர் தொகுதியில் தற்போதைய எம்.பி.யான கதிர் ஆனந்தே மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பசுபதி, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதையடுத்து வேலூர் தொகுதியில் வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக சார்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் தான் கூட்டணி கட்சிகளும் ஆதவு தெரிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது,“இந்த வேலூர் தொகுதிக்கும் எனக்கும் மிகப்பெரிய நெருக்கம் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு திமுக உறுப்பினராக இருந்த நான் முதன் முதலாக சகோதரர் கதிர் ஆனந்துக்காக பிரச்சாரம் செய்தேன். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் என்னைத் தட்டிக்கொடுத்துக் கொடுத்து நன்றாக பிரச்சாரம் செய்து விட்டு வா என்று கூறி வாழ்த்தி அனுப்பினார். இன்று நான் எம்எல்ஏ, அமைச்சர் என்று உயர்ந்து உங்கள் முன்பு நிற்கிறேன்.இப்போது கூட கதிர் ஆனந்திற்காக, அவர் எனக்கு சீனியர் என்பதற்காக அந்த உரிமையில்தான் நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

இம்முறை கதிர் ஆனந்தை 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைக்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். ஏனென்றால் இந்த வேலூர் தொகுதிக்கு கதிர் ஆனந்த் செய்துள்ள சாதனைகள் மகத்தானது.

சென்னை-பெங்களூர் ஹைவேயில் உள்ள சத்துவாச்சாரி பகுதிதான் ஒட்டுமொத்த வேலூருக்கும் மையமாக இருக்கிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி ஆர்டிஓ வரை இங்குதான் அமைந்திருக்கிறது. ஆனால், சத்துவாச்சாரி மக்கள் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடக்க நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்தனர். முறையான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால், ஏராளமான விபத்துக்களும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. எனவே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றியது கதிர் ஆனந்த்தான். மட்டுமல்லாது வேலூரில் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு வர நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் அதிகமான முறை குரல் எழுப்பியிருந்தார். வேலூர் லோக்சபா தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்தவரும் கதிர் ஆனந்த் தான்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை அறிமுகப்படுத்தி, பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "என்னைப் பொறுத்தவரை, உங்களில் ஒருவனாக உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பவன்தான், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். ஒவ்வொரு நாளும், நான் என்ன என்ன பணிகளைச் செய்கிறேன், என்ன திட்டங்களை மக்களுக்காகக் கொண்டு வருகிறேன், எங்கெல்லாம் பயணிக்கிறேன் என்று உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். ஏன் என்றால், என்னுடைய பொது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.

ஆனால், இப்போது தேர்தல் வந்துவிட்டதால், தமிழகத்துக்குச் சில ‘பார்ட்-டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார்கள். யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும். யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறுகளையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனுக்கு மட்டும் வருவார். வெள்ளம் வந்தால் வர மாட்டார். நிதி கேட்டால் கொடுக்க மாட்டார். சிறப்புத் திட்டம் கேட்டால் செய்ய மாட்டார். இப்படி, மக்களை ஏமாற்றி, தமிழகத்துக்கு எந்த நன்மையும் செய்து தராமல், துரோகம் செய்யும் பார்ட்-டைம் அரசியல்வாதிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டும். தேர்தல் முடிந்ததும் தமிழகத்துப் பக்கமே வரமாட்டார்கள்.

இத்தனை முறை இலங்கைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கச்சத்தீவு பற்றி நினைவு வரவில்லையா? உச்ச நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கில் கூட, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. மீட்க வேண்டுமானால் போர்தான் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது, வெளியுறவு கொள்கை என்று மழுப்பலாக மத்திய அரசு பதில் அளித்தது. இப்போது தேர்தல் வந்ததும் கச்சத்தீவு நாடகம் போடுகின்றனர்" என்றார்.
    

எதிர்க்கட்சியாக இருக்கின்ற போது எப்படி பாஜகவை எதிர்க்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நேற்று பேசினார். ஆனால், முன்பு ஆளும் கட்சியாக இருந்த போது பாஜகவின் அனைத்து சட்டங்களுக்கும் அந்த புலிப்பாண்டி, எலிப்பாண்டியாக மாறி ஆதரவு கொடுத்தார். ஆனால் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது மக்கள் விரோத சட்டத்திற்கு எதிராக போராடினோம். இப்போது ஆளும் கட்சியாக ஆளுநர்களின் அத்துமீறலை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று போராடி வெற்றி கண்டிருக்கிறோம். சிஏஏ சட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் நம் அரசு தீர்மானம் கொண்டு வந்தபோது, அதை ஆதரிக்கக் கூட மனம் இல்லாமல் எம்.எல்.ஏ.க்களுடன் வெளியே சென்று விட்டார் எடப்பாடி பழனிசாமி. நாடாளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்து வாக்களித்து அது நிறைவேற முக்கிய காரணியாக இருந்துவிட்டு, இப்போது அதை எதிர்க்கிறோம் என்று அதிமுகவும், பாமகவும் கூறுவது பசப்பு நாடகம் இல்லையா?

இந்த தேர்தலிலும் கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.