அமெரிக்காவில் இருந்து தாயகம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
அரசு முறை பயணம் முடிந்து அமெரிக்காவில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை புறப்பட்டார்.
2030ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதார மதிப்பை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்காக கடந்த மாதம் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். மொத்தம் 17 நாட்கள் சுற்றுப்பயண திட்டட்தில், சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரில் பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முதலமைச்சரின் இந்த அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இதுவரை18 நிறுவனங்களுடன் ரூ. 7,616 கோடி முதலீட்டிகான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன் நிலையில் தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வ அமெரிக்க அரசு முறை சுற்றுப்பயணம் நேற்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய நேரப்படி இன்று காலை (அமெரிக்க நேரப்படி இரவு ) அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சிக்காகோவில் இருந்து புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரின் வருகைக்கு நன்றி தெரிவித்து அமெரிக்க வாழ் தமிழர்கள், சிகாகோ விமான நிலையத்தில் பதாகை ஏந்தி வழியனுப்பி வைத்தனர். நாளை சனிக்கிழமை அதிகாலை 8 - 9 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமெரிக்க பயணம் மற்றும் முதலீடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.