போதைப்பொருளை ஒழிக்க தமிழ்நாடு காவல்துறை தீவிரம் - முதல்வர் ஸ்டாலின்..!!
போதைப்பொருள் மற்றும் இணையவழி குற்றங்களை தடுக்க அண்டை மாநில காவல்துறையினருடன் இணைந்து செயல்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா , தெலங்கானா, அந்தமான் ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசும், காவல்துறையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது; கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் இன்றைக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களை முளையிலேயே கிள்ளி எறியத் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அமைதியான மாநிலம், அங்கு அமைதியின்மையை உருவாக்க எதையாவது பரப்புவீர்களா என யூடியூபர் வழக்கு ஒன்றில் சமூக வலைதளத்தால் ஏற்படும் பாதிப்பு பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையாகச் சாடியுள்ளார். சமூக வலைதளத்தில் பரவக்கூடிய வதந்திகளைத் தடுக்க மிகுந்த கண்காணிப்போடு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
போதைப்பொருட்களின் தீமைகள் பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் வருவதை தடுக்க அண்டை மாநில போலீசாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஏடிஎம் கொள்ளையர்களை பிடிக்க ஒருங்கிணைந்து செயல்பட்ட தமிழ்நாடு, கேரள காவல்துறையை பாராட்டுகிறேன். குற்றவாளிகளை பிடிக்க ஒரு மாநில காவல்துறை மற்ற மாநிலத்துக்குச் செல்லத் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையவழி குற்றங்களை தடுப்பதில் மற்ற மாநிலங்களுடன் இணைந்து செயல்படவேண்டும். ” என்று தெரிவித்தார்.