அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு.!
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றடைந்தார். முன்னதாக நேற்று முன்தினம் ( ஆக.27) இரவு விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று காலை அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்தார். அங்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நடிகர் நெப்போலியன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். மேலும், இந்த பயணத்தின் போது சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிக்காக்கோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களை சந்தித்துப் பேச உள்ளார். முன்னனி நிறுவனங்களிடம் தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுப்பதோடு, ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. தற்போது அமெரிக்கா சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.