மதுரை மாவட்டத்திற்கு 6 முக்கிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!
மதுரை மாவட்டத்திற்கு ஆறு புதிய வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய சாலை
மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வைகை ஆற்றின் வடகரையில் - விரகனூர் சுற்றுச்சாலை முதல் சக்குடி வரை 8.4 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.130 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2. பழைய பாதாள குழாய் திட்டம் மாற்றம்
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகள், மீனாட்சியம்மன் கோயில் சுற்றிய நான்கு மாசி வீதிகள், வெளி வீதிகள், புதூர், அண்ணா நகர், சந்தைப்பேட்டை, தெற்குவாசல், எஸ்.எஸ். காலனி, ஆரப்பாளையம், அரசரடி, பழங்காநத்தம், பைக்காரா ஆகிய பகுதிகளில் பழைய பாதாள சாக்கடை குழாய்கள் அகற்றப்பட்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
3. வெள்ளத் தடுப்புச் சுவர்
மதுரை கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் உத்தங்குடி உபரி நீர்க் கால்வாயில் ரூ.7 கோடியில், தடுப்புச் சுவர் கட்டுப்பட்டு, நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
4. கண்மாய் புனரமைப்பு, தடுப்பணை கட்டுமானம்
மதுரையின் மேலூர் வட்டத்தில் இருக்கும், கேசம்பட்டி கிராமம், பெரிய அருவி நீர்த்தேக்கம் மற்றும் அதைச் சார்ந்த கண்மாய்கள் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். மேலூர் வட்டம், சூரப்பட்டி அருகே பாலாற்றின் குறுக்கே 9 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டப்படும்.
5. ஏரிகள் & கால்வாய்கள் மேம்பாடு
மதுரை மேற்கு வட்டத்தில் இருக்கும் கொடிமங்கலம், மேலமாத்தூர், புதுக்குளம் மற்றும் விளாச்சேரி கிராமங்களில் இருக்கும் பல்வேறு ஏரிகள் மற்றும் கால்வாய்கள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
6. முக்கிய சாலைகள் மேம்பாடு
வாடிப்பட்டி வட்டம், அலங்காநல்லூர் ஒன்றியத்தின் சாத்தையார் அணை முதல் வைகாசிப்பட்டி வரை உள்ள சாலை, முடுவார்பட்டி முதல் சல்வார்பட்டி வரை உள்ள சாலை மற்றும் பாலமேடு முதல் வேம்பரலை வரை உள்ள சாலை ஆகியவை ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்.


