தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தகவல் போலி - பி. வில்சன்..!

 
1

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு தொடர்பாக வெளியுறவு அமைச்சில் இருந்து, தகவல் உரிமை சட்டமான ஆர்டிஐ வாயிலாக, தனக்கு கிடைத்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

கடந்த, 1961ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் நேரு, கச்சத் தீவுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் தர வேண்டிய அவசியமில்லை என்றும், அதன் உரிமையை இலங்கைக்கு விட்டுத் தரத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.

தொடர்ந்து, தமிழகம் வந்த பிரதமர் மோடியும், கச்சத்தீவு விவகாரத்தில், திமுகவும், காங்கிரசும் சேர்ந்து தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் துரோகம் இழைத்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

தற்போது, கச்சத்தீவு தொடர்பாக வெளியான ஆர்டிஐ ஆவணம் போலியானது என்று சில ஆவணங்களை ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன் தன், ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் 5ல் கச்சத்தீவு தொடர்பான ஆவணங்களை கோரி, அண்ணாமலை விண்ணப்பம் செய்துள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவர், அதே துறையின் கீழ்நிலை செயலராக பணியாற்றும் அஜய் ஜெயின் என்பவருக்கு, உரிய பதில்களை வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்.

அஜய் ஜெயின் மார்ச் 31ல், 17 பக்க பதிலை வழங்கி, விண்ணப்பத்தை முடித்து வைக்கிறார். அண்ணாமலையின் ஆர்டிஐ விண்ணப்பத்துக்கு பதில் வழங்கியவரின் பெயர் அஜய் ஜெயின். ஆனால், வெளியுறவு அமைச்சகத்தின் இணையத்தளத்தில், அஜய் ஜெயின் என்ற அதிகாரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

அதேநேரம், ஆர்டிஐ வாயிலாக, வெளியுறவுத் துறையில் கீழ்நிலை செயலராகப் பணியாற்றும் அலுவலர்கள் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டன. அதில், அஜய் ஜெயின் பெயர் இல்லை. மொத்தத்தில் இல்லாத ஒன்றை வைத்து பா.ஜ., அரசியல் செய்ய முயன்று உள்ளது என்று அரவிந்தாக்ஷன் பதிவிட்டுள்ளார்.

கச்சத்தீவு விவகாரத்தில் இல்லாத அதிகாரி பெயரில் போலி ஆவணம் வெளியிட்டு பாஜ சதி செய்துள்ளது. இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வழக்கு தொடரப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எச்சரித்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது எனக் கூறும் மத்திய அரசு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மட்டும் அதன் ஆவணங்களை எப்படி கொடுத்தது என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

“1976ல் எந்த பகுதியும் இலங்கைக்கு கொடுக்கப்படவில்லை என 2015ல் பிரதமர் மோடி அரசால் வெளியிடப்பட்ட மற்றொரு ஆர்டிஐ தகவலில் வெளியுறவுத்துறை அமைச்சு இதனை தெளிவுப்படுத்தியுள்ளது.

“இது புனையப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டமா? என்ற கடுமையான சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுபற்றி காவல்துறையில் புகார் பதிவு செய்து இந்தப் பிரச்சனையை முழுமையாக விசாரிக்க வேண்டும்,” என்று பி. வில்சன் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.