ஐயப்பன் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரிசனம்..!

 
1

கோவை மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டெல்லியில் இருந்து வந்த வேகத்தில் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை பரபரவென ஆரம்பித்து விட்டார். 

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதான கட்சிகளான திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகியவை தங்களது வேட்பாளர்களை அறிவித்து களத்தில் இறங்கி உள்ளன. கோவை மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும், நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணியும் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளனர்.

அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள், வேட்பாளர் அறிமுக கூட்டங்களில் பங்கேற்று தங்களது கட்சியினரிடையே ஆதரவை திரட்டி வருகின்றனர். நேற்று முந்தினம்  மாலை கோவைக்கு வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, அக்கட்சியினர் சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை கோவையில் உள்ள இரண்டாவது சபரிமலை என்று அழைக்கப்படும் சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலுக்கு அண்ணாமலை சென்றிருந்தார். அங்கு சட்டையின்றி தோளில் அங்கவஸ்திரம் அணிந்தபடி சிறப்பு பூஜைகளில் பங்கேற்றார்.

தொடர்ந்து ஐயப்பன் கோயிலில் விளக்கேற்றி வைத்து அவர் வழிபட்டதோடு, அங்குள்ள பசுக்களுக்கும் கீரைகளை வழங்கி வணங்கினார். இதைத் தொடர்ந்து கோயிலில் திரண்டு இருந்த ஏராளமான பக்தர்களிடம், தனக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். பிற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது கட்சியினர் இடையே ஆதரவு திரட்டி வரும் நிலையில், கோவைக்கு வந்த முதல் நாளிலேயே அண்ணாமலை பொதுமக்களிடம் பிரச்சாரத்தை துவக்கி உள்ளார்.