ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது - மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதில்

 
Tamilisai

ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறது, காது இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தெரிவித்து இருந்த நிலையில், ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா காது இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது, ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது என தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ.சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது: மருத்துவமனைகள் கட்டப்படும் காலம் பெரியது அல்ல. எவ்வளவு பிரமாண்டமாக, எவ்வளவு நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக கட்டப்படுகிறது என்பதுதான் முக்கியம்.  நம் மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வேறு மாநிலத்தை புரிந்துகொள்ள முடியும். இதுதான் இந்தியாவின் இறையாண்மை. ஆனால் சிலரின் கவனக்குறைவால் இந்த சகோதரத்துவம் துண்டுதுண்டாக ஆகிக்கொண்டு இருப்பதை நாம் ஒரு போதும் ஒத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இங்கே தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிக்கு மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் சிகிச்சை அளிக்கிறார். கேரளாவைச் சேர்ந்தவருக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர் சிகிச்சை அளிக்கிறார். ஒன்றாக பார்க்குக் போது ரத்தமும் ஒன்றுதான், இந்த சத்தமும் ஒன்றுதான், இந்த குரலும் ஒன்றுதான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எல்லாருடைய ரத்தமும் சிவப்புதான். ஆனால் இந்தியாவின் ரத்தம் தேசப்பற்றோடு உள்ள ரத்தம்.

Tamilisai

ஆளுநர்களுக்கு வாய் இருக்கிறதா, காது இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது. நீட்டை ஆதரித்து சில நேரங்களில் நான் கருத்து சொல்லும் போதும் சமூக வலைதளங்களில் என்னை பார்த்து நிறைய சொல்லுவார்கள். ஆனால் ஒரு அரியர் கூட இல்லாமல் மருத்துவப்படிப்பை படித்தவர் நான். மக்களுக்கு சேவை செய்வதுதான் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் நோக்கமாக இருக்க வேண்டும் என நினைப்பவர் நான்.  இவ்வாறு கூறினார்.