‘கொத்தடிமை மாதிரி நடத்துறாங்க’ ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

 
‘கொத்தடிமை மாதிரி நடத்துறாங்க’ ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் 

தமிழ்நாடு முழுவதும் ஸ்விக்கி மூலம் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்விக்கி (Swiggy) ஊழியர்களை தொழிலாளர்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளும் வழங்கிட வேண்டும்,அ னைத்து ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான பழைய ஊதிய முறை தொடர வேண்டும், சீனியர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கி வந்த சலுகைகளை மீண்டும் வழங்கிட வேண்டும், ஒரு கிலோமீட்டருக்கு 10 ரூபாயும் , ஒரு ஆர்டருக்கு குறைந்த பட்டசம் 30 ரூபாயும் வழங்கிட வேண்டும், அதோடு பேட்ச் ஆர்டருக்கு 20 ரூபாய் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்விக்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 10,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர், ஸ்விக்கி நிறுவனம் எங்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று கூறினர். மேலும்  கிலோமீட்டருக்கு 3 - 5 ரூபாய் மட்டுமே வழங்குகின்றனர் வெயில், மழை என்று பாராமல் வேலை செய்தும் எந்த பலனும் இல்லை என வேதனை தெரிவித்த ஸ்விக்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களை ஸ்விக்கி நிறுவனம் போலீசாரை வைத்து மிரட்டுவதாகவும் கொத்தடிமை போன்று நடத்துவதாகவும் புகார் கூறினர். கொத்தடிமைகளை போல நாங்கள் வேலை செய்து வருகிறோம் ஆனால் ஸ்விக்கி நிறுவனம் செவி சாய்க்கவில்லை என்றும், பொதுமக்களும் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர்.