ஸ்வீட் நியூஸ்..! தீபாவளிக்கு கூடுதல் விடுமுறை அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் வரும் 20 ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை என, தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை தினங்களாக உள்ளன. இதன் காரணமாக சென்னை உள்பட பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக வசிப்பவர்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாடிய கையோடு அவர்கள் குடும்பத்துடன் மீண்டும் புறப்பட்டு வந்து மறுநாளான செவ்வாய்க்கிழமை பணிக்கு திரும்ப வேண்டிய கட்டாயம் எழுந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதில், ‛‛தீபாவளி பண்டிகை அன்று பகலை விட இரவு நேரத்தில் குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வண்ண, வண்ண பட்டாசு வகைகளை வெடிப்பார்கள். அதன் பிறகு தீபாவளி அன்று இரவு பெரும்பாலான மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை அவசரம் அவசரமாக கொண்டாடிவிட்டு திரும்பவும் தாங்கள் படிக்கும் அல்லது பணிபுரியும் ஊருக்கு இரவோடு இரவாக பயணப்பட்டு செல்வதில் சிரமம் உள்ளது. இதனால் அக்டோபர் 21 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21 ஆம் தேதி விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர் தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒருநாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வருகிற 25.10.2025 சனிக்கிழமை அன்று பணி நாளாக கடைபிடிக்கப்படும்.'' என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை பல்வேறு தரப்பினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.


