இனிப்பு பிரியர்கள் ஷாக்..! இருட்டுக்கடை அல்வா, பால்கோவா, கடலைமிட்டாய் விலை கிடு கிடு உயர்வு..!

 
1

திருநெல்வேலி அல்வா விலை உயர்வு

உலகப்புகழ் பெற்ற நெல்லை இருட்டுக்கடையில் அல்வா விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு நாளை (ஆக.27) முதல் அமலுக்கு வரும் என கடை நிர்வாகம் அறிவித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்ற கடைகளில் அல்வா, பால் அல்வா, பால்கோவா ஆகியவற்றின் விலையும் கிலோவுக்கு ரூ.20 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், விற்பனை வழக்கம் போல் நடைபெற்று வருவதாகவும் கடையின் உரிமையாளர்கள் நம்மிடம் தெரிவிக்கின்றனர்.

விலை உயர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற மற்றொரு இனிப்புகளில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலை கிலோ ரூ.320- லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்க்கரை விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைத் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால்கோவா உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பால்கோவா உற்பத்தியாளர் திருப்பதிராஜ் கூறுகையில், "சர்க்கரை விலை உயர்வால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அமைந்துள்ளதால் இந்த வழியாக கடக்கும் பயணிகள் வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவாவை வாங்காமல் செல்வதில்லை. ஆகையால் இங்கு செயல்படும் நூற்றுக்கும் மேற்பட்ட பால்கோவா கடைகளில் எப்போதுமே விற்பனை அமோகமாக இருக்கும். பால்கோவா தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை உயர்வு

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான மற்றொரு சுவீட்டான கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. வெல்லம், ஏலக்காய், நிலக்கடலை போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வால் கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை கிலோவுக்கு சுமார் 25% அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.220- க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கடலை மிட்டாய், தற்போது ரூ.270- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தவிர, ஸ்வீட்ஸ் கடைகளில் ஜாங்கிரியின் விலை கிலோவுக்கு ரூ.70 வரையும், ஒரு பீஸ் குளோப் ஜாமூன் ரூ.18- லிருந்து ரூ.22 ஆகவும், அல்வா கிலோவுக்கு ரூ.150 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் விற்பனை சற்று குறைந்துள்ளதாகவும், அதன் காரணமாக உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.