“எல்லா புதருக்குள்ளேயுமா போலீஸ் லைட் போட முடியும்?”- சர்ச்சைக்கு மன்னிப்புக்கோரிய எஸ்.வி.சேகர்
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், “தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொல்வதை ஏற்க முடியாது. என் வீட்டு பீரோவைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்றால் அதற்குச் சட்டம் ஒழுங்கு எப்படிப் பொறுப்பாகும்? ஒரு பெண் புதருக்குப் பின்னால் மறைந்து நின்றபோது குற்றவாளிகள் வந்துவிட்டார்கள் என்கிறார்கள். அதற்காகப் போலீஸ் எல்லா புதருக்குள்ளுமா லைட் போட்டு வைப்பார்கள்? ஒரு நியாயமான குடிமகனாக இதை கேட்கிறேன். நம்மை நாமே தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி விளாத்திக்குளம் சம்பவத்தில், பெண்கள் மீது பழியைப் போடுவதாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில், “யாரையும் குறிப்பாக இறந்து போனவர்களை பற்றி தவறாகபேசுவது தவறு என நினைப்பவன் நான். நேற்று பொதுவாக பெண்களுக்கு பெற்றோர் அதிக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக அறிகிறேன். சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

