நொடி இடைவெளியில் தப்பிய உயிர்..! – பெங்களூரில் கேஸ் டெலிவரி ஊழியருக்கு நேர்ந்த நடுங்க வைக்கும் அனுபவம்!

 
1

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மல்லேஸ்வரம் பகுதியில், வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் விநியோகிக்க வந்த ஊழியர் ஒருவர், எதிர்பாராத விதமாகச் சிலிண்டர் தீப்பற்றி எறிந்தபோதிலும் நொடிக் இடைவெளியில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அக்டோபர் 31 அன்று மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு எல்பிஜி (LPG) கேஸ் சிலிண்டரை விநியோகிப்பதற்காக விநியோக ஊழியர் சென்றுள்ளார். பண்டிகை காலத்தை முன்னிட்டு அந்த வீட்டின் நுழைவாயில் அருகே சிறிய அகல் விளக்கு (ஹனதே) ஒன்று ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. விநியோக ஊழியர் சிலிண்டரைக் கீழே இறக்கி வைத்து, அதன் பாதுகாப்பு சீலை (Safety Seal) அகற்றிய போது, எதிர்பாராத விதமாகச் சிலிண்டரிலிருந்து கேஸ் கசியத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு கசிந்த கேஸ், அருகில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் சுடரில் பட்ட அடுத்த நொடியே, சிலிண்டர் தீப்பற்றிப் பிரம்மாண்டமாக எரியத் தொடங்கியது. ஆபத்தை உணர்ந்த விநியோக ஊழியர், சுதாரித்துக் கொண்டு உடனடியாகப் பின்வாங்கி ஓடியதால் பெரு விபத்து தவிர்க்கப்பட்டு அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

தீயை அணைப்பதற்காகத் தண்ணீர் ஊற்றி முயற்சித்த போதிலும் தீயைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மல்லேஸ்வரம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்புப் படையினர் நிலவரத்தைக் கட்டுப்படுத்தி ஆய்வு செய்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பூஜைகள் செய்யும் போதோ அல்லது அகல் விளக்குகள் ஏற்றி வைக்கும் போதோ எரியும் நெருப்பின் அருகே கேஸ் சிலிண்டர்களை வைக்க வேண்டாம் என்று கர்நாடக காவல் துறை பொதுமக்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், புதிய கேஸ் சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ளும் போது சுற்றிலும் நெருப்புப் பொறிகளோ அல்லது அகல் விளக்குகளோ இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.