சூரியூர் ஜல்லிக்கட்டு- 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்

 
சூரியூர் ஜல்லிக்கட்டு- 15 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்

திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 15 காளைகளை அடக்கி கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்து இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். 

Image

திருச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் இன்று நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 658 காளைகளும் , 400 மாடுபிடி
வீரர்களும்   கலந்து கொண்டனர். இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.  

இந்த போட்டியின்  இறுதியில் 15 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கே.டி.எம். கார்த்திக் என்பவர் முதல் பரிசை வென்றார். அவருக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.  திருவெறும்பூர் போலீஸ் டி.எஸ்.பி அறிவழகன் பரிசை வழங்கினார். அதே போல சிறந்த மாடாக திருச்சி மாவட்டம் இளந்தப்பட்டியை சேர்ந்த தமிழ் என்பவரின் காளை தேர்வானது. மாட்டின் உரிமையாளரான தமிழுக்கு 1200 சதுர அடி நிலம் பரிசாக வழங்கப்பட்டது. போட்டியின் போது சிறப்பாக பங்கேற்ற வீரர்களுக்கும் , காளைகளுக்கும் கட்டில், குத்து விளக்கு, மின் விசிறி உள்ளிட்ட பல்வேறு  பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது.

Image

இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள், பாதுகாப்பு பணியிலிருந்த இரண்டு காவலர்கள் என மொத்தம் 73 பேர் காயமடைந்தனர். அதில் ஒரு காவலர் உள்ளிட்ட 13 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்காக  500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் நேரில் வந்து கண்டு ரசித்தனர்.

சிறந்த மாடு பிடி வீரராக தேர்வான கார்த்திக் செய்தியாளர்களிடன் பேசுகையில்,சிறந்த மாடு பிடி வீரராக தேர்வானது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சென்னையில் எம்.பி.ஏ பயின்று வருகிறேன். என்னை போன்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.