நாய்கள் கடித்த சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை!!

சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரியும் ரகு என்பவர் தனது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். பூங்காவில் சோனியாவும் , மகளும் நேற்று இருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.
அப்போது இரண்டு நாய்களும் சிறுமி சுதக்ஷாவை கடுமையாக கடித்துள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறி உள்ளது . இதைத்தொடர்ந்து சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அவரது தாய் அனுமதித்துள்ளார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர் .
இந்நிலையில் நாய்கள் கடித்த சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ராட்வீலர் நாய்களால் கடித்துக் குதறப்பட்ட 5 வயது சிறுமிக்கு இன்று அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ள நிலையில் சிறுமியின் உடல்நிலையை தனியார் மருத்துவமனையின் மருத்துவர் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.