காக்ரோச் ஜனதா கட்சி பேரணிக்கு கட்டுப்பாடு விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
காக்ரோச் ஜனதா கட்சி பேரணியைத் தடுக்க இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
டெல்லியில் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' சார்பில் இந்தியா கேட் முதல் டெல்லி காவல்துறை தலைமையகம் வரை அமைதிப் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 25-ஆம் தேதி மத்திய அரசு அளித்ததாகக் கூறப்படும் உறுதிமொழிகளை குறிப்பாகப் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவது நிறைவேற்றவில்லை எனக் கூறி இந்தப் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், உரிய அனுமதியின்றி போராட்டங்கள் நடத்தப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை வைத்துள்ளார் மேலும் பேரணி நடைபெறும் அதே காலகட்டத்தில் டெல்லியில் 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறவுள்ளதால், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் வருகை தரும் வேளையில் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ரிஸ்வான் வாதிட்டார். மாநாடு முடியும் வரை போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரினார். சட்டம்-ஒழுங்கு ஏற்பாடுகள் குறித்து மத்திய அரசும், மாநில அரசும் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், அமைதியாகவும் சட்ட வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

