உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..! அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை?

 
1

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் ரயிலில் முன்பதிவு செய்து கடந்த 10ம்தேதி தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். அனைவரும் டிக்கெட் முன்பதிவு செய்திருந்த நிலையில், திடீரென டிக்கெட் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் கூறி, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அனைத்து விவசாயிகளையும் ரயில்வே நிர்வாகம் கீழே இறக்கி விட்டது. விவசாயிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்ததால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாமல் போனது.

இதனிடையே வாரணாசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதையடுத்து, வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை மே 20ம் தேதி வரை நீட்டிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும் வாரணாசி செல்ல உரிய வசதி செய்து தர ரயில்வே துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு மனு செய்தார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ”வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள், தமிழகத்தில் ஏன் போட்டியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அய்யாக்கண்ணுவுக்கு வாரணாசியில் என்ன வேலை? அங்கு யார் வாக்களிப்பார்கள்?. சமூக சேவகர் என்றால் தமிழ்நாட்டில் போட்டியிடுங்கள். விளம்பரத்துக்காக இதுபோன்று மனு தாக்கல் செய்கிறீர்கள்”என்று கட்டமாக தெரிவித்தனர்.

அப்போது குறுக்கிட்ட அய்யாக்கண்ணு தரப்பு வழக்கறிஞர், “விளம்பர நோக்கத்திற்கு வழக்கு தொடரவில்லை. விவசாயிகளுக்காக போராடி வருகிறோம். இணையதளம் வாயிலாக வேட்பு மனு தாக்கல் செய்ய வசதி செய்யப்படவில்லை” என்று வாதிட்டார். எனினும் ரிட் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.