தமிழ்நாடு அரசுக்கு 1 வாரம் 'கெடு' விதித்த உச்ச நீதிமன்றம்..!
தமிழ்நாடு காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜுவால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ந் தேதி ஓய்வு பெற்றார். அவர் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பே புதிய டிஜிபி நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், புதிய டிஜிபியை தமிழ்நாடு அரசு நியமிக்கவில்லை. இதற்கு பதிலாக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
நிரந்தர டிஜிபி நியமிக்கப்படாமல், பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், டிஜிபி நியமனத்தில் பின் பற்ற வேண்டிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றவில்லை என்றும் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மதுரையைச் சேர்ந்த மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும், வழக்கறிஞருமான ஹென்றி திபேன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி புதிய டிஜிபி தேர்வு தொடர்பாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னரும் டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. பின்னர், ஹென்றி திபேன் தரப்பில் 2-வது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், ‘டிஜிபியை தேர்வு செய்யும் குழுவில் உள்துறை கூடுதல் செயலாளர் இடம் பெற வேண்டும். வழக்கு விசாரணையை பிப்ரவரி 16 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
ஆனால், வழக்கு விசாரணையை ஒத்தி வைக்கும் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. புதிய டிஜிபி நியமனம் குறித்த புதிய பரிந்துரையை யுபிஎஸ்சி-க்கு 1 வாரத்திற்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதன் பின்னர், அதனை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி இறுதி பரிந்துரையை வழங்கும் என்று தெரிவித்தனர். இதன் பின்னர், உடனடியாக டிஜிபி நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தெலங்கானா டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில், கடந்த 5 ஆம் தேதி வழங்கிய உத்தரவை நீதிபதிகள் இன்று மேற்கோள்காட்டினர். அந்த உத்தரவில், டிஜிபி நியமனம் தொடர்பான முன்மொழிவுகளை அனுப்புவதில் பல மாநிலங்கள் காட்டிய தாமதத்திற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், உரிய நேரத்தில் பரிந்துரைகளை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட யுபிஎஸ்சிக்கு அதிகாரம் வழங்கியும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு டிஜிபி நியமனம் தொடர்பான வழக்கில், பிப்ரவரி 5 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுகளை அனைத்து மாநிலங்களும், யுபிஎஸ்சியும் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
யுபிஎஸ்சி சார்பில் டிஜிபியை தேர்வு செய்யக் கூடிய ஐந்து பேர் இடம் பெறும் குழுவில் தமிழ்நாட்டின் சார்பில் இரண்டு பேர் இருக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் பி. வில்சனின் வாதத்தை ஏற்றுக் கொண்டு இந்த குழுவை திருத்தி அமைக்கவும் யுபிஎஸ்சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இது குறித்து வழக்குத் தொடர்ந்த ஹென்றி திபேன் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், "யுபிஎஸ்சி குழுவில் பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக தலைமைச் செயலாளர் அல்லது அதற்கு இணையான மூத்த ஐஏஎஸ் அதிகாரி இருக்கலாம் என நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. டிஜிபி பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் 10 ஆண்டுகள் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் தமிழகத்திலோ, சிபிஐயிலோ அல்லது வெளிநாட்டிலோ பணியாற்றி இருந்தாலும் சரி ஒரு வாரத்திற்குள் யுபிஎஸ்சிக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த ஆணையை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார்.

