சீமான் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் தடை!

நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்பு புகாரை வாபஸ் பெற்ற அவர் மீண்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் சீமான் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. தனக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். அதே வேளையில் போலீஸ் வழக்கை ரத்து செய்யக்கூடாது என தெரிவித்து இருந்தது. ஆனால் சீமான் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவர் குறித்த வழக்கை 12 வாரங்களுக்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் சீமானுக்கு எதிரான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது விஜயலட்சுமி மற்றும் தமிழக அரசு பதில் அளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சீமானும், நடிகை விஜயலட்சுமியும் பேசி தீர்வுக்காண 2 மாதம் அவகாசம் வழங்கியும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் இரு தரப்பும் கலந்து பேசி உடன்பாடு காண அறிவுறுத்தி 12 வாரத்தில் விசாரித்து அறிக்கை சமர்பிக்க வேண்உம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.