தவெக ஆட்சிக்கு ஆதரவு? டெல்லியில் காங்கிரஸ் மேலிடம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. கட்சி தொடங்கிப் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று தமிழ்நாடு அரசியலில் புதிய சக்தியாக விஜய் உருவெடுத்துள்ளார்.
இருப்பினும் ஆட்சியமைக்க 118 உறுப்பினர்களின் ஆதவு தேவை என்ற சூழல் உருவாகி உள்ளதால், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளார். இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவைக் கோரியுள்ளார். அவர் தனது அரசியல் பயணத்தில் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளே தமக்கு ஊக்கம் அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மக்கள் விரும்பியபடி, தமிழ்நாட்டில் ஒரு மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்; அரசமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. தமிழ்நாட்டை பாஜக எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆட்சி செய்யக் கூடாது என்பதிலும் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது.
எனவே, தேர்தலில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை மனதில் கொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆட்சியமைக்க ஆதரவு தருமாறு விஜய் விடுத்த கோரிக்கை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இறுதி முடிவு எடுக்க வேண்டுமென காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி உள்ளது" என்று தெரிவித்தார்.
எனவே, தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பின்படி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

