பாஜக கூட்டணியில் தேமுதிகவா?- சுதீஷ் விளக்கம்

 
சுதீஷ் சுதீஷ்

நாங்கள் மூப்பனாரின் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளோம். இன்று நாங்கள் வந்ததற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜிகே முப்பனாரின் 24-வது நினைவு தினம் கடைபிடிக்கபட்டது. இதில் ஒன்றிய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, தேமுதிக துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட பலர் மலர் மரியாதை செலுத்தினர்.

மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், “மூப்பனாருக்கும் கேப்டனுக்கும் கிட்டதட்ட 40 ஆண்டு நட்பு இருந்தது. மூப்பனார் பல முறை கேப்டன் திரைப்பட விழாவில் பங்கேற்று உரையாற்றி இருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு நட்பு என ஒன்று உள்ளது. தேமுதிக அங்கம் பெறும் கூட்டணி தான் 2026இல் வெற்றி பெறும். கூட்டணி பங்கு வகிக்க வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் எங்களது கூட்டணி தொடர்பான அறிப்பு வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். நாங்கள் மூப்பனாரின் குடும்ப நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு உள்ளோம். இன்று நாங்கள் வந்ததற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார்.