திடீரென புகை வந்து தகதகவென எரிய தொடங்கிய கார்! உள்ளே இருந்தவர்களின் நிலை என்ன?

 
கார்

மீஞ்சூரில் ஓடும் காரில் புகை வந்து கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை நித்யா என்பவர் தமது குடும்பத்துடன் காரில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். மீஞ்சூர் வந்த போது காரில் திடீரென புகை வந்ததால் காரை விட்டு அனைவரும் இறங்கியுள்ளனர். அப்போது கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. கார் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். கார் தீப்பற்றிய நிலையில் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 

சுட்டெரித்த வெயிலில் கார் கொளுந்து விட்டு எரிந்த நிலையில் அருகில் இருந்த மின்சார பெட்டியும் தீயில் எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரையும், ரசாயன நுரையையும் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காரில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக இறங்கியதால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. குடியிருப்பு பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட கார் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.