பீகார் கொலை வழக்கில் திடீர் திருப்பம்- பலாத்காரம் செய்யப்படவில்லை என உடற்கூறாய்வில் தகவல்
பீகார் தொழிலாளியின் மனைவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தடயங்கள் இல்லை என்பது மருத்துவ தடய அறிவியல் குழுவினர் அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் அவரது மனைவி முனிதா குமாரி இரண்டு வயது ஆண் குழந்தை கடந்த 24ஆம் தேதி தரமணியில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கௌரவ்குமாரின் சடலம் பிரேத பரிசோதனை முடிந்து அவரது சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டது. முனிதா குமாரி மற்றும் குழந்தையின் சடலம் இன்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரத பரிசோதனை செய்யப்பட்டது. உறவினர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருப்பதால் இருவரின் சடலமும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முனிதா குமாரியை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான தடயங்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறை அளித்துள்ள விளக்கத்தில், பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டறியப்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முனிதா குமாரி (20), க/பெ. கௌரவ் குமார் என்பவரின் பிரேதமானது இராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் 31.01.2026 முற்பகல், உதவிப் பேராசிரியர்கள் மருத்துவர். சிவக்குமார் மற்றும் ரகுராம் ஆகியோர் அடங்கிய மருத்துவர் குழுவினரால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், மேற்படி பெண் கற்பழிக்கப்பட்டதற்கான மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவுமில்லை என்றும், தலையில் இரும்பு கம்பியினால் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே இறப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.


