சென்னையை குளிர்வித்த மழை

 
மழை

சென்னையில் பெரும்பாலான இடங்களில் பெய்த கோடை மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

Image
கடந்த மாதம் முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் என்பது அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் என சொல்லக்கூடிய கத்திரி வெயிலும் தற்போது தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் என்பது சென்னையை பொருத்தவரை மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன்  காணப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் கோயம்பேடு, வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர், கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. கடந்த இரண்டு மாதமாக சென்னையில் மழை பெய்யாத நிலையில் தற்போது கோடை மழை பெய்துள்ளது பொது மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தி உள்ளது. இந்த மழையானது தொடர்ந்து பெய்ய வேண்டும் என்பது சென்னை மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

Image

இதனிடையே சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.