சேலம் அருகே பட்டாசு கிடங்கில் திடீர் விபத்து- ஒருவர் பலி
சேலம் மாவட்டம் அய்யோத்தியாப்பட்ணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி ஊராட்சி சீரிக்காடு பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் வீராணம் அருகே கோமாளி வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வெள்ளியம்பட்டி ஊராட்சி காட்டுவளவு பகுதியில் உள்ள சீரிக்காடு கரடில் அரசு அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் ஆலையும், அருகே பட்டாசு குடோனும் நடத்தி வருகிறார். அதே பகுதியில் தனித்தனியாக மேலும் ஐந்து பட்டாசு குடோன்கள் சிறிய அளவில் உள்ளது. இங்கு நாட்டு வெடி உள்ளிட்ட அனைத்து விதமான வெடி வகைகளும் தயாரிக்கப்படுகிறது. இன்று காலை பட்டாசு குடோனில் நான்கு பேர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது பட்டாசு மருந்து மூட்டையை கீழே இறக்கிய போது ஏற்பட்ட உரசலில் திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியது. அப்போது அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த நான்கு பேரும் விபத்தில் சிக்கினார்.
#சேலம் மாவட்டம் அருகே பட்டாசு ஆலையில் நேர்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
— AIR News Chennai (@airnews_Chennai) September 4, 2024
செய்தியாளர் - விஜயகுமார் pic.twitter.com/1MINVuGIjh
இதில் சிவகாசியை சேர்ந்த தொழிலாளி ஜெயராமன் படுகாயம் அடைந்தார் மற்றும் கார்த்திக், சுரேஷ், முத்துராஜ் ஆகிய மூன்று பேரும் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஜெயராமன் வழியிலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து வீராணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகர காவல் துணை ஆணையர் பிருந்தா சபா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.