1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்- ஆத்திரமடைந்த பயணிகள் போராட்டம்
ஒரு மணி நேரத்திற்கு மேலாக சென்ட்ரலில் இருந்து கும்முடிபூண்டி செல்லும் புறநகர் ரயில் வராததால் ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் சென்னை விம்கோ ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை விம்கோ நகர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வராததால் பணி முடித்து செல்பவர்கள் கல்லூரியில் இருந்து செல்பவர்கள் முக்கிய நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் மணிக்கணக்கில் காத்திருந்தனர். விம்கோநகர் மெட்ரோ ரயிலில் இருந்து இறங்கி எண்ணூர் பொன்னேரி கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில் பயணிகள் விம்கோ நகர் புறநகர் ரயிலை குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் விம்கோ ரயில் நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் ரயில்வே நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் ரயில் கால தாமதம் ஆனது குறித்து விளக்கம் அளிக்காமல் மெத்தனமாக இருந்ததனால், ஆத்திரமடைந்த ரயில் பயணிகள் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயில் வருவதைக் கண்டு அதனை வழிமறித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ரயில்வே நிர்வாகத்தினிடம் கேட்ட பொழுது திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில்கள் காலதாமதமானதாக விளக்கம் அளித்தனர். பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டு சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயில் இயக்கப்பட்டது. புறநகர் ரயில் விம்கோ நகர் ரயில் நிலையம் சென்றடைந்த போதும். கும்மிடிப்பூண்டி ரயிலை வழிமறித்தும் ரயில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில்வே நிர்வாகம் முறையற்ற ரயில் பயணிகளை சோதிப்பதாகவும் எவ்வித முன்னறிவிப்பும் பயணிகளுக்கு அறிவிப்பதில்லை. ரயில்களின் காலதாமதம் மற்றும் சிக்னல் கோளாறு குறித்தும் தெரிவிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தனர். ரயில்கள் குறித்த நேரத்திற்கு இயக்கப்படாததால் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்த நிலையில், கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் மின்சார ரயில் வந்ததனால் பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு ரயிலில் ஏறிச் சென்றனர். ரயில் வராததால் பயணிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


