லாரியை கடத்தி சென்று ஜிஎஸ்டி சாலையை அலறவைத்த சுபாஷ் நீதிமன்றத்தில் ஆஜர்- கீழ்ப்பாக்கத்தில் சிகிச்சை அளிக்க உத்தரவு

 
அச் அச்

செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று டாராஸ் லாரியை கடத்திச் சென்ற பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் (எ) சுடலை முத்து (30) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

டாராஸ் லாரியை சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு விபத்து ஏதும் ஏற்படுத்தாமல் கடத்திச் சென்ற நிலையில், போக்குவரத்து காவலர் முருகன் ஆபத்தான நிலையில் லாரியில் தொங்கி சென்ற காட்சிகள் வெளியாகி இருந்தது. உடன்குடியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் இயக்கப்படும் பேருந்தின் ஓட்டுனராக சுபாஷ் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15ஆம் தேதி சக ஓட்டுநருடன் ஏற்பட்ட தகராறில் தலையில் தாக்கப்பட்டதால் மனநலம் பாதிக்கப்பட்டது போல பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று டாரஸ் லாரியை கடத்திச் சென்று விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன்ற போது சுபாஷை பொதுமக்கள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் சுபாஷ் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். சுபாஷ் என்கிற சுடலைமுத்துவிற்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அளித்த சிகிச்சைகளின் அடிப்படையில், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சுபாஷ் என்கிற சுடலை முத்து கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.