சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம் - சு.வெங்கடேசன் பதிவு!

சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம். உலக தாய் மொழி தினத்தை கொண்டாடுவோம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இதனிடையே மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் தமிழகத்திற்கு கல்வி நிதி வழங்க முடியும் என மத்திய அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், சமஸ்கிருதத்தை பேசவோ, எழுதவோ தெரிந்த ஒருவர்கூட இல்லாத நாடாளுமன்றத்தில் நாங்கள் பேசும் அனைத்தையும் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கும் வசதியை செய்துள்ளது ஒன்றிய அரசு. ஆனால் கோடிக்கணக்கான மாணவர்கள் எழுதும் தேர்வுகளை அவரவர்களின் தாய்மொழியில் நடத்த மறுத்து இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து நடத்துகிறது. சமஸ்கிருத, இந்தி திணிப்பை எதிர்ப்போம். உலக தாய் மொழி தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.