வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீரால் நிரம்பி வழிகிறது - சு.வெங்கடேசன்

 
su venkatesan

மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பணவீக்கத்தைப் பற்றி இங்கே பேசி உள்ளீர்கள், நிறைய வரைபடங்கள் வெள்ளை அறிக்கையிலே இருக்கிறது. ஆனால் ஒரே ஒரு வரைபடத்தை நீங்கள் ஏன் தவறவிட்டீர்கள்? சமையல் கியாஸ் விலை உயர்வு வரைபடத்தை நீங்கள் வெளியிடத் தயாரா? 10 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரிகள் 3.5 மடங்கு உயர்ந்திருக்கிறது, டீசல் மீதான வரி 9.5 மடங்கு உயர்ந்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? யமுனையின் கரையிலே சாந்தி வனத்திலே உறங்கிக் கொண்டிருக்கிற ஜவஹர்லால் நேரு தான் இதற்கும் காரணமா? 

நீங்கள் யோசித்துப் பாருங்கள், கார்ப்பரேட்டுகளின் வரி 2016 ஆவது ஆண்டு 33 சதவீதம் இருந்தது. உங்கள் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளின் வரி 22% மட்டுமே. 11% கார்ப்பரேட்டுகளுக்கு குறைத்து இருக்கிறீர்கள். 1% கார்ப்பரேட் வரி 50,000 கோடி எனில் 11% என்றால் எத்தனை ஆயிரம் கோடி என்று நிதி அமைச்சர் இந்த அவையிலே கணக்கு முன் வைப்பாரா? 


மக்களுக்குக் கொடுத்தால் அது சலுகை, மக்களுக்கு கொடுத்தால் அது இலவசம். கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்தால் அது ஊக்கத்தொகை. உங்களது அகராதியை இந்த நாடு மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களது வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.