திருப்பூரில் நடுரோட்டில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்!

 
1

திருப்பூர் மாநகரில் உள்ள அரசு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 30-க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்!

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் ரயில் நிலைய பகுதியில் உள்ள நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையே, “யார் கெத்து?” என்கிற போட்டியில் அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், நேற்று (அக்.30) மாலை பள்ளி முடிந்ததும் நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் குமரன் சிலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காகக் காத்திருந்தனர். அப்போது, சின்னசாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், மரக்கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளுடன் கொலைவெறியுடன் கூச்சலிட்டபடி குமரன் சிலை பகுதிக்கு ஓடிவந்து நஞ்சப்பா பள்ளி மாணவர்களைத் தாக்கத் தொடங்கினர். 

இதனால் அதிர்ச்சியடைந்த நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். ஆனால், விடாமல் துரத்திய கும்பல், நடுரோட்டிலேயே அவர்களை விரட்டி விரட்டித் தாக்கியது. இதனைக்கண்டு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்தச் சம்பவத்தில், நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஒருவர் பலத்த காயமடைய, அவர் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தைப் பார்த்த அப்பகுதியினர் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார், மோதலுக்கான காரணம் என்ன? தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் யார் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் ஆயுதங்களுடன் நடுரோட்டில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த காவல் துறையும், கல்வித் துறையும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.