விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்- தலைமை ஆசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் மாநகராட்சி கோட்டை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தேர்வுக்கான விடைத்தாள்களை இணைத்து, மாணவிகளை வைத்து தையல் எந்திரம் மூலம் தைக்க வைத்த வீடியோ வெளியான விவகாரத்தில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு ஆசிரியர் செல்வி ஆகிய இருவரை இடைக்கால பணிநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மாணவிகளை வைத்து, பிளஸ் டூ விடைத்தாள்களை இணைத்து தைக்கும் பணி, பள்ளி வகுப்பறையில் நடந்தது. வகுப்பறையில் தையல் மெஷின்களை கொண்டு வந்து, அதில் மாணவிகளை பயன்படுத்தி விடைத்தாள்களை தைக்கும் காட்சியை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டார். பொது தேர்வுக்கான விடைத்தாள்களை மாணவிகள் தைக்கும் காட்சியைக் கண்டு , கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து சேலம் மாவட்டம் முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை மேற்கொண்டு , மாணவிகளை வைத்து விடைத்தாள்களை தைக்க வைத்த , கோட்டை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு ஆசிரியர் செல்வி ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தலைமையாசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியை ஆகிய இருவரை தற்காலிக பணியிடை் நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.