"அண்ணா.. விட்ருங்கண்ணா"- கஞ்சா விற்க சொல்லி அடித்து சித்ரவதை... மாணவர்கள் கதறல்

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரிகள் ஐடிஐ மாணவர்களை தாக்கிய வீடியோ வெளியான விவகாரத்தில் ஐடிஐ மாணவர்களை தாக்கியவர், வீடியோ எடுத்தவர் ஆகிய இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளதாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
சிதம்பரம் நகரில் உள்ள ஐடிஐ ஒன்றில் படிக்கும் மாணவர்கள் இருவரை கஞ்சா வியாபாரிகள் ஒரு அறையில் வைத்து தாக்கிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்திய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், இன்று இரவு சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் ஐடிஐ மாணவர்களை அறையில் வைத்து தாக்கியது தொடர்பாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், இந்த வீடியோ 5 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ்குமார், போண்டா என்கிற நவீன்ராஜ் ஆகிய இரண்டு நபர்களில் ஒருவர் அடிக்கிறார். ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இது சம்பந்தமாக அப்போதே தெரிய வந்தது.
20.11.2024 அன்று விக்கி, நவீன்ராஜ் உள்ளிட்ட 3 முக்கிய குற்றவாளிகள் உட்பட 16 குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அதில்14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடம் கிடைத்த தகவல்களை வைத்து அண்ணாமலைநகர் காவல் ஆய்வாளர் தொடர் விசாரணை மேற்கொண்டு, ஆந்திர மாநிலம் நெல்லுரை சேர்ந்த உதயபாஸ்கர் என்பவரிடமிருந்து 20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 26.11.2024 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு இந்த இருவர் உட்பட 15 குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில் 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் முக்கிய குற்றவாளியான ஒடப்பு சிவாவை கடந்த பிப்ரவரி மாதம் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறோம்.
கஞ்சா விற்க மாட்டீயாடா?’’ அரசு கல்லூரி மாணவனை கொடூரமா தாக்கும் கஞ்சா கும்பல்!
— சுரேஷ் சொக்கலிங்கம் தமிழன் (@suresh15876832) March 8, 2025
அப்பா ஸ்டாலின்... எங்கப்பா இருக்க....?!
உங்க புள்ளைங்களை #திமுக_கஞ்சா_புள்ளைங்க தான் அடிச்சி கஞ்சா விற்க சொல்றாங்க...🤧🤧😡😡#கொடுஞ்சனியன்_திமுக pic.twitter.com/mvcy5zhBsL
இந்த வீடியோவில் இருக்கும் வீடியோ எடுத்தவர் அடித்தவர் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் கடலூர் மாவட்டத்தில் 35 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 80 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 கிலோ கஞ்சா இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஒருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. அப்போது யாரும் இதுகுறித்து புகார் தரவில்லை. அதனால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.