பெண் தோழியுடன் பேசுவதை கண்டித்த ஆசிரியர்- மாணவன் தற்கொலை

 
suicide

திருவாடானையில் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

suicide

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி- கற்பகம் தம்பதி.  இவர்களது மகன் அஜய் (15)இவர் சிகே மங்கலத்தில் உள்ள புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ஆம் தேதி வழக்கம் போல் அஜயின் அம்மா கற்பகம் 100 நாள் வேலைக்கு சென்று விட்டார். பள்ளிக்கு போகாமல் வீட்டில் தனியாக இருந்த அஜய் வீட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அந்த கடிதத்தில், ‘சக மாணவியோடு பேசியதை ஜூலி டீச்சர் என்னை தவறாக நினைத்து கண்டித்தார். எனக்கு இவ்வுலகில் வாழப் பிடிக்கவில்லை. இதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே அஜயின் உறவினர்கள் பள்ளி ஆசிரியை ஜூலி என்பவர் திட்டியதால் தான் அஜய் தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் போலீசார் மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பள்ளி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியையை வேறு பள்ளிக்கு மாறுதல் செய்வதாக உறுதியளித்தனர், அதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.