“என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவியின் பகீர் வாக்குமூலம்

 
“என் சாவுக்கு டீச்சரே காரணம்”- தீயில் கருகிய மாணவியின் பகீர் வாக்குமூலம்

கோவை வால்பாறையில் ஆசிரியர்கள் திட்டியதால் உடலில் தீ வைத்துக் கொண்ட 9 ஆம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், 3 ஆசியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி சிறுமியின் பெற்றோர் உடலை வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சக்திவேல் குமரன். இவரது மூத்த மகள் முத்து சஞ்சனா ரெட்டிக்கடை பகுதியில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த அக்.10 ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி முத்து சஞ்சனா உடலில் மண்ணென்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனிடையே மாணவி தான் தற்கொலைக்கு முயன்றது குறித்து வாக்கு மூலம் ஒன்று அளித்துள்ளார். அதில் தான் படிக்கும் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் சிந்தியா, தமிழ் ஆசிரியர் ராணிபாய், ஆங்கில ஆசிரியர் சியாமளா தேவி ஆகியோர் சக மாணவர்கள் முன்பு திட்டியதால் மன உளச்சலில் இருந்ததாகவும், இதனால் தற்கொலைக்கு முயன்றாதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி முத்து சஞ்சனா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மகளை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி பெற்றோர் உடலை வாங்க மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் மாணவியின் பெற்றோர், மாதர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் மனு அளித்தனர்.