மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு- ஞானசேகரன் வீட்டில் சோதனை
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார்.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விசாரணையின்போது சார் எனக்கூறி ஒருவரிடம் ஞானசேகரன் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி மீண்டும் உறுதி செய்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான ஞானசேகரன் மீது திருட்டு போன்ற குற்றங்களில் 20 வழக்குகள் உள்ளன. ரவுடியிசம், பெண்களுக்கு எதிரான வழக்குகள் இல்லை. குற்றம் நடக்கும் போது செல்போனை Flight mode-ல் போட்டுவிட்டு அம்மாணவியை பயமுறுத்த சார் என யாரிடமோ பேசுவது போல பாவனை காட்டியுள்ளான். இந்த வழக்கில் சார் என்று யாரும் இல்லை. ஞானசேகரன் வேறு ஒருவரிடம் பேசியதாக கூறுவது தவறு. மாணவியை மிரட்டுவதற்காக "SIR" என்ற வார்த்தையை குற்றவாளி பயன்படுத்தி இருக்கிறான். ஆனால், அந்த நேரத்தில் மொபைலை Flight Modeல் தான் போட்டு வைத்துள்ளான். கைதான ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி. 2வது ஒரு நபர் இருக்கிறார் என்பது பொய்யான தகவல். இதை ஒருசிலர் அரசியலாக்க முயற்சி செய்கிறார்கள் என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் கூறினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் ஒன்றரை மணி முதல் மூன்று பெண் எஸ்பிக்கள் சினேகா பிரியா, ஐமன் ஜமால் பிருந்தா தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர், கோட்டூர்புரத்தில் உள்ள ஞானசேகரனின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறு வயது முதல் அவரது செயல்பாடுகள், பெண்களுடனான தொடர்புகள், தொழில், அரசியல் தொடர்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.