ஆசிரியரை பழி வாங்க பாலியல் வன்கொடுமை புகார் அளித்த மாணவன்! கம்பி எண்ணும் அப்பாவி ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே கடந்த 14 ஆம் தேதி, 10ம் வகுப்பு மாணவனை அதேப்பள்ளியில் உள்ள ஆங்கில ஆசிரியர் உசேன் என்பவர் தனியார் திருமணத்திற்கு அழைத்து சென்று அங்கு மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வகம் சார்பில் ஆசிரியர் மீது புகார் அளிக்கப்பட்டு, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஆங்கில ஆசிரியர் உசேன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமாரை சந்தித்து மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளியின் ஆங்கில ஆசிரியர் உசேன் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், ஆசிரியர் மீது புகார் அளித்த மாணவன் ஏற்கனவே பல்வேறு தவறுகளில் ஈடுபட்டு வந்ததால் ஆங்கில ஆசிரியர் உசேன் மாணவனை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன் முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு ஆசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டை கூறி, அதனால் அவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளியில் இதுவரை ஆங்கில ஆசிரியர்கள் யாரும் பணியமர்த்த படவில்லை. இன்னும் சில நாட்களில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு உள்ள நிலையில் ஆங்கில பாட ஆசிரியர்கள் யாரும் இல்லமால் மாணவர்கள் எப்படி தேர்வு எழுதுவார்கள்? என கூறினர். மேலும் ஆங்கில ஆசிரியர் உசேன் மீது வீண்பழியை மாணவர் திட்டமிட்டு செய்துள்ளதால் அவருக்கு உரிய நீதியை வழங்க வேண்டுமெனவும் உடனடியாக அப்பள்ளியில் ஆங்கில ஆசிரியரை நியமிக்க வேண்டுமெனவும் கூறினர்.