வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த மாணவன்

 
death

திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவன், வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் தண்ட கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த, முரளி மணிமேகலை தம்பதியின் மகன் தீபக் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறான். இன்று வழக்கம் போல் பள்ளிக்கு வந்த தீபக் உணவு இடைவேளையின் போது, தண்ணீர் குடித்துவிட்டு வகுப்பறைக்கு திரும்பி உள்ளார். அப்போது திடீரென மூக்கில் நுரை தள்ளி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்து உள்ளார். இதுகுறித்து தீபக்கின் பெற்றோருக்கு பள்ளி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த தீபக்கின் பெற்றோர், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் அவனை அடித்ததாலயே உயிர் இழந்ததாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சைக்கு அழைத்து வருவதில் தாமதம் செய்துள்ளதாகவும், அதன் காரணமாகவே தனது மகன் உயிரிழந்ததாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement