நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவி தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே இன்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதி சேர்ந்த ரமேஷ் குமார்- ஆஷா என்பவரது மகள் கயல்விழி. நடப்பாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறு இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்த மாணவி வழக்கம் போல் நேற்று இரவு படுக்கை அறைக்கு சென்று உள்ளார்.
இன்று தேர்வு எழுத தாம்பரம் செல்ல வேண்டும் என்பதால் அவர் தாயார், காலை நான்கு மணிக்கு மகளை எழுப்புவதற்காக மாணவி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மேல்மருவத்தூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மன உளைச்சல் காரணமாக அல்லது தேர்வு பயத்தில் தற்கொலை செய்து கொண்டாரா என மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


