பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு

 
s

சென்னையில் விளையாடிக்கொண்டிருந்த மாணவன் பள்ளி மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை தியாகராய நகர், ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சர்வேஷ் என்ற 11ம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மாணவன் மயங்கி விழுந்தவுடன் தாமதிக்காமல் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து இருந்தால் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என பெற்றோர் கூறுகின்றனர். மேலும் மாணவன் உயிரிழந்தது குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து உயிரிழந்த மாணவனின் பாட்டி கூறுகையில், “ராஜாஸ் ஆஸ்பத்திரியில் அட்மிஷன் செய்திருப்பதாக பள்ளி நிர்வாகம் போன் செய்து கூறினர். அங்கு சென்று நாங்கள் பார்த்தபோது அவனுக்கு உயிர் இல்லை. காலையில போகும்போது காசு வாங்கிட்டு நான் போய்ட்டு வரேன்னு பாட்டின்னு போன பையன்.. கிரவுண்டில 10 நிமிஷமா மயக்கடிச்சி விழுந்து கிடந்து இருக்குறான்.. யாரும் கண்டுக்கல... எங்களிடம் சொல்லியிருந்தால் நாங்கள் எங்கேயாவது கொண்டு போய் சேர்த்து காப்பாத்திருப்போம். பெற்றோருக்கு என்ன நடந்தது என்றே முறையாக சொல்லவில்லை” என்றார்.