இரவு 9.30 மணிக்கு பயந்து பயந்து மாடிக்கு செல்லும் மாணவி ஸ்ரீமதி- சிசிடிவி வெளியீடு

 
cctv

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூரில் உள்ள சக்தி இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில், 12ம் வகுப்பு  படித்து வந்த ஸ்ரீமதி  எனும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி பள்ளியின் 3வது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால்,  இந்த மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை தெரிவித்து மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் நீதிகோரி போராடினர்.

இதற்கு முன்னரும் இந்த பள்ளியில் மாணவர்கள் இதுபோன்று மரணமடைந்துள்ளார்கள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டும்,  தற்போது மாணவி தரப்பில் பெற்றோர் தெரிவித்த பல்வேறு சந்தேகங்களும் இந்த விவகாரத்தில் பள்ளி மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை மற்றும் அதிகாரிகள் மீதும் பொதுமக்கள் கோபம் கொள்ள வழி ஏற்படுத்தியுள்ளது. மாணவி மரணம், காவல்துறையின் அலட்சியம், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரம் ஆகியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. 

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், இறப்பதற்கு முன்பாக மாணவி ஸ்ரீமதி பள்ளியில் நடந்து செல்லும் காட்சி வெளியானது. மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் நேரத்திற்கு சற்று முன்பாக படிக்கும் அறையிலிருந்து, விடுதி அமைந்துள்ள 3வது மாடிக்கும் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. அதில், 12-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு மாணவி ஸ்ரீமதி மாடிக்கு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் சார்பில் இரவு 10.30 மணியளவில் மாணவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலை 6 மணியளவில்தான் உடலை, பள்ளியின் காவலாளி பார்த்ததாக மாணவியின் தாயார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.