அரசு ஊழியர்களையும் வாட்டி வதைக்கும் திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்!!

 
EPS

தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுபோல், அரசு ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன என்று ஈபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே,
கொண்ட காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே –

என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விடியா திமுக அரசு கடந்த 36 மாதங்களாக கரப்ஷன், கலெக்ஷன், கமிஷனில் ஈடுபட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் உன்னதப் பணியினை செய்பவர்கள் அரசு ஊழியர்கள். இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் சரி, அதற்கு பின்பும் சரி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசமின்றி அரசு ஊழியர்கள் கடமை உணர்வோடு மக்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு இயந்திரம் நன்கு இயங்குவதற்கு அவ்வப்போது 'உராய்வு எண்ணெய்’ தடவுவது போல், அரசு ஊழியர்களை அழைத்துப் பேசி அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டு அவற்றை களைவதை அனைத்து அரசுகளும் செவ்வனே செய்து வந்தன. ஆனால், இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதுபோல், அரசு ஊழியர்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

ep

தேர்தல் வரும்போதெல்லாம், நாக்கில் தேன் தடவுவது போல் அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதிகளை அளித்து விட்டு, ஆட்சிக்கு வந்ததும் அவைகளை நிறைவேற்றாமல் பட்டை நாமம் போடுவதுதான் திமுக-வின் வாடிக்கை. நம் நாட்டிலேயே அதிகமான, சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தமிழ் நாட்டில் பணியாற்றி வருகின்றனர். தங்களது குறைகளை பலமுறை சங்கங்களின் மூலம் அரசுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை அவர்களது கோரிக்கைகளுக்கு இந்த விடியா திமுக அரசு தீர்வு காணவில்லை. ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடித்து இந்தியாவை ஆட்சி செய்தனர். தற்போதைய விடியா திமுக அரசும் அத்தகைய போக்கை கடைபிடிக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக போக்குவரத்துத் துறை மற்றும் காவல் துறையினரிடையே எழுந்த சலசலப்பு தேவையற்ற ஒன்றாகும். அரசு ஊழியர்களுக்கு உறுதியான நடைமுறைகளை / விதிகளை சொல்லித் தருவதன் மூலம் இதுபோன்ற தேவையற்ற வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கலாம். மேலும், இந்தப் பிரச்சனை உருவான உடனேயே என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசின் முதலமைச்சர் உயர் அதிகாரிகளுக்கு தக்க அறிவுறுத்தலை வழங்கியிருக்க வேண்டும். விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மாணவர்கள் பற்றிய விவரங்களையும், வருகைப் பதிவேட்டையும் ‘எம்மீஸ்’ தளத்தில் பதிவேற்ற கட்டாயப்படுத்துகிறது. இதனால், ஆசிரியர்கள் தினமும் காலை, மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ‘எம்மீஸ்' தளத்தில் பதிவேற்றுதிலேயே நேரம் போதவில்லை என்றும், மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நேரத்தைவிட, தங்களது கைப்பேசி இருக்கும் நேரம் அதிகமாகிவிட்டதாக ஆசிரியர்கள் இந்த அரசை குற்றம் சாட்டுகிறார்கள். நேரங்களில் ‘இன்டர்நெட் இணைப்பு' கிடைக்காமல் 'செல்போனில் எம்மீஸ் தளம் சுற்றிக் கொண்டிருப்பதையே' 'கடவுளைப் பார்ப்பது போல்' பயபக்தியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும், மாணவர்களுக்கு கற்பிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

EPS

அதேபோல், காவல் துறையில் பணிபுரியும் காவலர்களை ஆளும் கட்சி நிர்வாகிகள் மிரட்டுவதும், வருவாய்த் துறை ஊழியர்கள் மீது மணல் திருட்டு கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்துவதும் என்று, அனைத்து அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் ஏதேனும் ஒரு வகையில் இந்த விடியா திமுக ஆட்சியில் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழக அரசு வரலாற்றில் இல்லாத வகையில், கைத்தறித் துறை பணியாளர்கள் கடந்த 8 மாதங்களாக பல்வேறு இன்னல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாவதாக கண்ணீர் மல்க, மாநில மனித உரிமை ஆணையத்தின் கதவைத் தட்டியிருக்கும் அவலம் இந்த விடியா திமுக ஆட்சியில் நிகழ்ந்துள்ளது.

கைத்தறித் துறை பணியாளர்கள் 150 பேர் மனித உரிமை ஆணையத்தில், உயர் அதிகாரிகளால் தாங்கள் நசுக்கப்படுவதாகக் கூறியும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி மனு அளித்திருக்கும் விந்தை அரங்கேறி இருக்கிறது. ஒரு அரசுத் துறையின் ஊழியர்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவே பொம்மை முதலமைச்சரின் நிர்வாகத் திறமையின்மைக்கு சான்றாகும். தற்போதுள்ள மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆளும் திமுக-வால் நியமிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் கைத்தறித் துறை பணியாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று தோன்றவில்லை. மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துப் பணியாளர்கள், நியாய விலைக் கடை ஊழியர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் என்று அனைத்துத் துறை ஊழியர்களும் விடியா திமுக அரசிடம், தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இதுவரை இந்த விடியா திமுக அரசு, தேர்தல் சமயத்தில் அரசு ஊழியர்கள் தொடர்பாக அள்ளி வீசிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர் சங்கங்களும், போக்குவரத்து ஊழியர் சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

eps


மேலும், அனைத்துத் துறைகளிலும் ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முத்தாய்ப்பாக, தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தனிப் பிரிவிலேயே 25-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், இதனால், இவர்களது பணிகளையும் தாங்கள் கூடுதலாக கவனிப்பதாகவும், எனவே, உடனடியாக முதலமைச்சருடைய தனிப் பிரிவு அலுவலகத்தில் இருக்கும் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. எனவே, கைத்தறி ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள், மருத்துவர் பணியாளர் சங்கங்கள், ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர் சங்கங்களையும் அழைத்துப் பேசி, அவர்களுடைய குறைகளை உடனடியாகக் களையவும், தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.