ஜன.6 முதல் வேலை நிறுத்தம்; அரசு ஊழியர், ஆசிரியர்கள் அறிவிப்பு
அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'போட்டோ ஜியோ' சார்பில், வரும் ஜனவரி, 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட உள்ளதாக, அதன் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அமிர்தகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரதான கோரிக்கை, பழைய ஓய்வூதிய திட்டம். இதை நிறைவேற்றுவதாக கூறியே, முதல்வர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். பதவியேற்ற பின் கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டார். இதை அவருக்கு நினைவுபடுத்த, கடந்த நான்கு ஆண்டுகளில், ஏராளமான போராட்டங்களை நடத்தி விட்டோம். இருப்பினும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசின் இந்த நடவடிக்கையால், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மாறாக பழைய ஓய்வூதிய திட்டத்தை, முதல்வர் செயல்படுத்தி விட்டால், 70 சதவீத பிரச்னை சரியாகி விடும். ஜார்க்கண்ட், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள், தேர்தல் வாக்குறுதி அளிக்காமல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளன.
எனவே, இறுதி கட்டமாக, வரும், 29ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் கோரிக்கை ஆர்ப்பாட்டமும், அதை தொடர்ந்து, வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


