சென்னையில் குதிரை சவாரிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு!

 
1

சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் நோய்த்தொற்று பரவியதன் எதிரொலியால், உடல்நலக்குறைவாக உள்ள குதிரைகளை சவாரி செய்வதற்கு பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுமனிதர்களுக்கும் பரவக்கூடிய விலங்கு சார்ந்த நோய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நோய்த்தொற்று, நேரடித்தொடர்பு, மூக்கு, கண், புண் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் மூலம் இருந்து வேகமாக பரவும் தன்மை கொண்டது. சென்னையில் சமீபத்தில் இறந்த குதிரைக்கு, கிளாண்டர்ஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிச்செய்யப்பட்டது.

இதையடுத்து ICAR அமைப்பு, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்கு அவசர அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்; அருகிலுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்; நோய் பரவலை கட்டுப்படுத்த கடுமையான கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவ சேவைகள் துறை சார்பில் கால்நடை நோய் நுண்ணறிவு பிரிவு (Animal Disease Intelligence Unit), Veterinary Epidemiology Centre உள்ளிட்ட பிரிவுகள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் சவாரிக்காக பயன்படுத்தப்படும் சுமார் 140 குதிரைகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

கிளாண்டர்ஸ் நோய் பரவல் தொடர்பாக பொதுமக்கள், குறிப்பாக குதிரைகள் அதிகமாக பராமரிக்கப்படும் பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடாமல் உடனடியாக கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட பல கடற்கரைகளிலும், ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களிலும் குதிரை சவாரிக்கு கட்டுப்பாடுகளையும், முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி குதிரை சவாரி மேற்கொள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் பராமரிப்பு துறை உத்தரவிட்டுள்ளது.