அதிமுக ஆட்சி வந்ததும் பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இபிஎஸ் எச்சரிக்கை!
அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை அரியலூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டார். காலையில் விவசாயிகளிடம் கலந்துரையாடல் நடத்தினார். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சாலை குன்னம் பேருந்து நிலையம் அருகே வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக அரியலூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 20 அடி உயரமுள்ள ராட்சத மாலையை கிரேன் மூலம் எடப்பாடியாருக்கு சூட்டி அழகுபார்த்தனர்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் நகரில் உள்ள அண்ணா சிலை அருகில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
குன்னம் தொகுதியின் அத்தனை வாக்காளர்களும் குழுமி, இந்த பூமியே அதிரும் அளவுக்கு கடல்போல் காட்சியளிக்கிறது. ஸ்டாலின் அவர்களும், உதயநிதி அவர்களும் எங்கே பார்த்தாலும் பேட்டியிலும், பொதுக்கூட்டத்திலும் 2026 தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று பொய்யான செய்தியைச் சொல்கிறார்கள். குன்னம் தொகுதிக்கு வந்து எழுச்சியைப் பாருங்கள், இந்த எழுச்சியே வெற்றியைக் காட்டும். வெற்றி விழா காணுகிற காட்சியாகவே இந்தக் கூட்டத்தைப் பார்க்கிறேன்.
200 இடம் என்று திமுக கனவு காணலாம், ஆனால் அதிமுக 210 இடங்களில் வெல்லும். ஸ்டாலின் தலைமையில் 50 மாத காலம் ஓடிருச்சு, பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு ஏதாவது திட்டம் கொடுத்திருக்கிறாங்களா? இத்தொகுதியில் அமைச்சர் வேறு. தந்திரமாக மக்களை ஏமாற்றி ஆட்சி செய்கிறது திமுக.
மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் கொடுப்பதாக சொல்கிறார், அது மக்களின் வரிப்பணம், உங்க பணம் இல்லை. அதுவும் 28 மாதங்கள் கழித்து அதிமுக பல முறை கேட்டபின்னர் தான் கொடுக்க முன்வந்தது. நாங்கள் தான் அழுத்தம் கொடுத்து கொடுக்கச் செய்தோம். ஆனால் இப்ப பேசுவதெல்லாம் ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்ததாக தவறான கருத்தைப் பதிய வைக்கிறார். இப்போது விடுபட்டவர்களுக்கு 30 லட்சம் பேருக்கு கொடுப்பதாக சொல்கிறார். அதுவும் மக்கள் மீது பரிதாபப்பட்டு கொடுக்கலை, தேர்தல் வருகிறது ஓட்டு தேவை. அதுதான் காரணம். ஆக, மக்களுக்காக இல்லை, ஓட்டுக்காகவே கொடுக்கும் முதல்வர் ஸ்டலின்.
2021 தேர்தலில் அதிமுக தேர்தல் அறிக்கையில் 1500 ரூபாய் கொடுப்பதாகச் சொன்னோம். ஆனால், ஸ்டாலினும் சகாக்களும் பொய்யைப் பேசி ஆட்சிக்கு வந்துட்டாங்க. வெறும் 10% வாக்குறுதிதான் நிறைவேற்றி உள்ளனர். இது விவசாயிகள் நிறைந்த பகுதி. 100 நாள் வேலைத்திட்டம் 150 நாள் சம்பள உயர்வு என்று சொன்னார்கள். ஆனால், 50 நாள் என சுருங்கிவிட்டது. எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பலமாதம் சம்பளம் நின்றுபோச்சு. இதற்கு மத்திய அரசு மீது பழிபோட்டார். நாங்க மத்திய அமைச்சரை பார்த்து பேசியபோது கணக்கே கொடுக்கலை, ஊழல் செய்திருக்கிறார்கள் என்று சொன்னார். இருந்தபோதும் நான் கேட்டுகொண்டதற்கு இனங்க 2,919 கோடி விடுவித்தார். ஊழல் நடந்ததால்தான் உரிய நேரத்தில் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை. ஏழைகள் வயிற்றில் அடிக்கும் ஒரே கட்சி திமுக.
காற்றை கண்ணால் பார்க்க முடியுமா? இந்த மாவட்டத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் கண்ணில் பார்க்க முடியாத காற்றிலும் ஊழல் செய்தவர். இவர்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்ததால் மக்கள் துன்பத்தில் உள்ளனர். இவர்களால் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? திமுகவின் திட்டங்களை ஸ்டாலின் சொன்னார், உதயநிதி சொன்னார் யாரும் கேட்கலை. அதனால் திமுக திட்டங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்வதற்காக நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்திருக்கின்றனர். தினமும் பேட்டி கொடுக்கணுமாம். இதற்கு என்று துறை இருக்கிறது. அதுதான் வெளியிடணும். மக்கள் செல்வாக்கு இழந்தததால், மக்களை குழப்பி மீண்டும் ஆட்சிக்கு வர கூடுதல் தலைமைச் செயலாளரை நியமித்திருக்கிறார்கள்.
அமுதா ஐஏஎஸ் பேசுறாங்க, 1 கோடியே 5 லட்சம் பேருக்கும் மனு வாங்கி, 1 கோடியே 1 லட்சம் பேசுக்கு தீர்வு காணப்பட்டது என்கிறார். இது உண்மை என்றால் முழு விளக்கம் கொடுங்க. இல்லைனா அதிமுக ஆட்சி வந்ததும் பொய் சொன்னதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திமுக முக்கியம்னா அக்கட்சியில் சேர்ந்துவிட்டு, அப்புறமா பேட்டி கொடுங்க. அரசு அதிகாரியா இருந்துகிட்டு தவறான புள்ளி விவரம் கொடுக்காதீங்க. அதற்கான முழு பொறுப்பு நீங்கதான் ஏற்கணும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை செய்தார்.


