புயல் எதிரொலி- டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
![]()
நேற்று முன் தினம் (01-12-2023) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று (02-12-2023) காலை 0530 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனிடையே வங்க கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜாம்' புயல் தீவிர புயலாக மாறுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு 230 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் கிழக்கு - தென் கிழக்கில் மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட தமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். தீவிர புயலாக கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கி.மீ. முதல் 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
4 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என்றும், அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.


